Monday, 3 April 2023

புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு வெற்றிகரமான ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசிச் செய்கை

புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு வெற்றிகரமான ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசிச் செய்கை

''காலநிலையால் உச்ச பாதிப்படைந்த பிரதேசத்தில் காலநிலைக்கு சீரமைவான விவசாய நடைமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு வெற்றிகரமான ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசிச் செய்கை''.

‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி என்பது ஒரு கலப்பின பயிராகும். இது வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரக் கூடியது. குறிப்பாக வீட்டுத் தோட்டங்கள் முதலான இடங்களில் பயிரிடுவதன் மூலம் தொடர்ச்சியாகச் சிறந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்த வகையில், இந்த ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரச் செய்கை உற்பத்தியை காலநிலைக்கு சீரமைவான விவசாய நடைமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பின்பற்றிக் கிழக்கு மாகாணத்தில் அம்பறை மாவட்டத்தில், கோமாரி கமநல சேவை நிலையப் பிரிவில் அமைந்துள்ள கோமாரி - 01 என்ற கிராம சேவையாளர் பிரிவில் உள்ள விவசாயி (சிவாகரன் மற்றும் அவரது மனைவி சுமித்திராதேவி) மிகவும் வெற்றிகரமாக செய்கை செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் Red Lady’ (றெட் லேடி) பப்பாசி விதை ஒப்பீட்டளவில் விலை கூடியதொரு விதையாகக் காணப்படுகின்றது. அத்துடன் ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி விதைகளை வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது. மேலும் ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரக் கன்றுகளும் ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த மரக் கன்றுகளாகவே சந்தைகளில் கிடைப்பதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதோடு, மற்றும் அவை அரிதாகக் கிடைப்பதையும் பார்க்க முடிகின்றது.  

அந்த வகையில்இ ஒரு Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரத்தில் இருந்து இரசாயனம் அற்ற மற்றும் செலவில்லாமல் அல்லது மிகக் குறைந்த செலவில், மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் ஒரு இடத்திலேயே, ஒரு மரத்தில் இருந்து பல மரக் கன்றுகளை உருவாக்க முடியும் என்பதை ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசியை வெற்றிகரமாக செய்கை செய்துவரும் விவசாயி, உலக வங்கி மற்றும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்ட அலுவலர்கள் கிழக்கு மாகாணத்திற்குக் திட்டக் கள விஜயத்தை மேற்கொண்ட போது அத் தொழில்நுட்ப உத்தியையும் தனது வெற்றிக் கதையையும் உத்தியோகத்தர்கள் மற்றும் சக விவசாயிகளிற்கு தெளிவாக விளங்கப்படுத்தி இருந்தார்.

ஒரு Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரக் கன்றைக் கொள்வனவு செய்வதாக இருந்தால் கிட்டத்தட்ட ருபா 750 - 900 ஐச் செலவிட வேண்டும். அத்துடன் நாங்கள் அந்த விதையைப் பயன்படுத்தி  ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரத்தை உருவாக்குவதற்கு (1 அடிக்கு வளர) குறைந்த பட்சம் கிட்டத்திட்ட ஒரு மாத காலம் வரை எடுக்கும்.

 ஆனால் இலகுவாக, தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்தி பதி வைத்தல் முறையினூடாக கிட்டத்தட்ட பதினைந்து நாட்களிற்குள் சிறந்த, ஆரோக்கியமான, இரசாயனமற்ற ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரக்கன்றுகளை தத்தமது தோட்டத்திலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்

‘Red Lady’ பப்பாசி பதி வைத்தல் முறை

தோட்டத்திலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ ஏற்கனவே வளர்ந்துள்ள Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரத்தின் அங்குரத்தின் உச்சிப் பகுதியை அதாவது மேற்பகுதியை வெட்ட வேண்டும். பின்னர் வெட்டப்பட்ட ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரத் தண்டை ஒரு பிளாஸ்ரிக் போத்தலால் அல்லது முடியால் மூடி விட வேண்டும். இதனை மூடுவதன் நோக்கம் என்னவென்றால், வெட்டப்பட்ட பப்பாசி மரத்தின் தண்டுக்குள் மழை நீரோ அல்லது ஏனைய நீரோ உட்செல்லாமல் பாதுகாத்துக் கொள்வதற்கே ஆகும்

இவ்வாறு மரத்தின் அங்குரத்தின் உச்சிப் பகுதியை அதாவது மேற்பகுதியை வெட்டி அதனைப் போத்தலால் மூடிய பின்னர் வெட்டப்பட்ட
அந்த பப்பாசி மரத்தின் பக்கவாட்டில் இருந்து கிழைகள் வர ஆரம்பிக்கும். அதாவது கணு இடைகளில் இருந்து வெவ்வேறு பல கிழைகள் உருவாகும். உருவாகிய அந்தப் புதிய கிழைகள் ஓரளவு வெட்டக் கூடிய அளவிற்கு வந்ததன் பின்னர், அவ்வாறு கிழைகள் உருவாகும் இடத்தில் அதாவது தாய் மரத்திற்கும் தண்டிற்கும் இடைப்பட்ட உரியப் பகுதியில் சிறு வெட்டு ஒன்று போடப்பட வேண்டும். இவ்வாறு சிறு வெட்டு ஒன்றைப் போடுவதன் மூலம் தாய் மரத்திற்கும் புதிய கிழைக்கும் இடையில் பகுதி அளவான தொடர்பைத் துண்டிக்க முடியும். சிறு வெட்டு ஒன்று போடப்பட்ட பின்னர் தாய் மரமும் கிழையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க (தொடர்பு இல்லாமல்) இடையில் சிறு பொலித்தீனை மறித்து வைக்க வேண்டும். பின்னர் கிழை விடும் பகுதியின் கீழ்ப் பகுதியில் மண் மற்றும் கூட்டெருக்களைக் கொண்டு பொலித்தீன் ஒன்றினால் கட்டி கிழமைக்கு ஒரு முறை நீர் விட வேண்டும். இங்கு மண்ணிற்குப் பதிலாக தும்புத் தூள் பயன்படுத்துவது மிகவும் வினைத்திறனாக இருக்கும். இவ்வாறு கிழமைக்கு ஒரு முறை நீர் விட்டுக்கொண்டுவரும் போது 15 நாட்களில் புதிய கிழையில் இருந்து வேர்கள் வந்துவிடும். விரைவான வேர் வளர்ச்சிக்காக IBA என்ற Indol Butic Acid ஐத் தடவுவதும் உண்டு.

15 நாட்களின் பின்னர் வேர்கள் உருவாகிய கிழைகளை (கன்றுகளை) வெட்டி பிரித்தெடுத்து கிட்டத்தட்ட 10 நாட்களிற்கு அந்தப் பொலித்தீனோடே சாடி ஒன்றினுள் (விற்பனைக்காக என்றால்)  அல்லது சொந்த தேவைக்காக என்றால் நிலத்தில் நிழலில் வைக்க வேண்டும். போதியளவான வேர்கள் உருவாகிய பின்னர் அந்த அந்த பொலித்தீனை அகற்ற முடியும். மேலும் அடிப்பகுதியில் இருந்து மேலிருந்து கீழ்நோக்கி மெல்லிய கீறல்கள் செய்யும் போது கலங்கள் மேவி வளர்ந்து அடிப்பகுதி பெரிதாகும். இதனால் காற்று பலமாக வீசும் போது மரம் முறியாது. 

பதி வைத்தல் மரத்தின் சிறப்பம்சம் யாதெனில் நிலத்தில் இருந்து 30 சென்ரி மீட்டர் அல்லது ஒரு அடியில் இருந்து காய்கள் வர ஆரம்பிக்கும். புதிய ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பழமும் கிட்டத்தட்ட இரண்டு அல்லது இரண்டரைக் கிலோ நிறையில் இருக்கும்.

இவ்வாறு 15 ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரங்களை பராமரிப்பதன் மூலம் கிட்டத்தட்ட ருபா 40,000 மாத வருமானமாக பெறக் கூடியதாக இருக்கும் என புன்னகையுடன் அந்த விவசாயி தெரிவித்தார்இங்கு மிக முக்கியமான விடயம் யாதெனில், தும்புத் தூள் அல்லது கூட்டெருக்களை வைத்து பொலித்தீனால் கட்டப்பட்ட இடத்தில் இருந்து உருவாக்கப்படும் புதிய பப்பாசி மரக்கன்று தாய் மரத்தில் உள்ள அதே குணாம்சங்கள் மற்றும் பழத்தின் சுவை முதலானவையில் எந்தவொரு மாற்றமும் இன்றி தாய் மரத்தின் சாயலைக் கொண்டதாக இருக்கும்.

 அத்தோடு அவை குறுகிய காலத்தினுள் தொடர்ச்சியாக வருமானம் ஈட்டக் கூடிய வகையில் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்கும்இந்த ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசிப் பழம் ஏனைய பப்பாசிப் பழங்களைப் போலன்றி இனிப்பு சுவை நிறைந்ததாகவும், எவரும் தேடி வந்து வாங்கக் கூடிய அளவிற்கு சந்தை வாய்ப்பைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

பதி வைத்தல் முறையினூடாக உருவாக்கப்படும் ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசியால் கிடைக்கும் நன்மைகள்

·        பதி வைத்தல் மூலம் உருவாக்கப்பட்ட மரம் ஒன்றரை அடி உயரத்தில் இருந்தே தொடர்ச்சியாகப் பழத்தைக் கொடுக்கும்.

·        ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசிப் பழத்தின் அதே இனிப்புச் சுவை என்றும் மாறாது.

·        பழங்களை அறுவடை செய்கின்றபோது ஏற்படும் இழப்புகளை முற்றாகத் தவிர்க்கலாம்.

·        நேரடியாக பீடைகளை பௌதீக முறைப்படி அகற்றலாம்.

·        குறுகிய உயரத்திலேயே பழத்தைப் பெறலாம். 

·        செலவு குறைந்த மற்றும் தொடர்ச்சியான வருமானம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

·        ஒரு மரத்தில் இருந்து பல ‘Red Lady’ (றெட் லேடி) பப்பாசி மரக் கன்றுகளை ஒரே நேரத்தில் உருவாக்க முடியும். 

எழுத்து: சர்மிலா திரிகரன், பால்நிலை அபிவிருத்தி உத்தியோகத்தர், திட்ட முகாமைத்துவ அலகு - CSIAP
புகைப்படம் மற்றும் தகவல்: த. சேகரன், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் - EP, CSIAP
பு. சாய் புருசோத்தமன், விவசாய இலகுபடுத்துநர் - கோமாரி, - EP, CSIAP

தயவு செய்து Video வைப் பார்க்க லிங்னை கிளிக் செய்யவும்